புரட்சி கவிதைகள்









பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு


திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!


எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்


புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!


நம்பினை பகலினை நள்ளிருள் என்றே


சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!


சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!


இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?


கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்


பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்


தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி


நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,


வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?


மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!


            - புரட்சி பாவலன் பாரதிதாசன்




எங்கள் வாழ்வும் எங்கள்

வளமும்

மங்காத தமிழென்று

சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ

மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள்

ஒன்றாதல் கண்டே!

திங்களொடும்

செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும்

உடுக்களோடும்

மங்குல் கடல்

இவற்றோடும் பிறந்த

தமிழுடன்

பிறந்தோம் நாங்கள்,

ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம்

என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு

சங்கே ! |

சிங்களஞ்சேர்

தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென்று ஊது

சங்கே !

பொங்கு தமிழர்க்கு

இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச்

சங்கே முழங்கு!

வெங்கொடுமைச்

சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித்

தோள்கள்!

கங்கையைப் போல்

காவிரி போல்

கருத்துக்கள்

ஊறும் உள்ளம் எங்கள்

உள்ள ம்!

வெங்குருதி தனில்

கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!